ஈரோடு: ஈரோடு யூனியன், கூரப்பாளையம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் இல்லம் தேடி கல்வி மைய துவக்க விழா நடந்தது. மையத்தை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: கொரோனா தொற்று பரவலுக்கான பொது முடக்க காலத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கற்றல் இழப்பை சரி செய்தல், மாணவர்களிடம் வாசிப்பு, பள்ளி சூழலை உருவாக்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், இத்திட்டம், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. 20 குழந்தைகளுக்கு ஒரு மையம் வீதம் இல்லம் தேடி மையம் அமையும். தன்னார்வலர்களாக செயல்பட விரும்புவோர், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்து இணையலாம். இதுவரை ஈரோடு மாவட்டத்தில், 10 ஆயிரத்து, 615 பேர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் சேகரன், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.