கோவை:கோவையில் விளைவிக்கப்படும் நாட்டு கோவக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் ஆகியவை ஷார்ஜாவிலுள்ள நீரிழிவு நோயாளிகளுக்காக, விமானங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில் இந்தியர்கள் பலர் தகவல் தொழில்நுட்பம், கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப்பொறியாளர்களாக, பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.அங்குள்ள வாழ்க்கை நடைமுறை காரணமாக, இளம் வயதிலேயே அங்கும் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு, நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரைப்படி, இயற்கையாக விளையும் கோவக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் ஆகியவற்றை காலை உணவாகவோ அல்லது காலை உணவின் ஒரு பகுதியாகவோ சாப்பிடுகின்றனர்.அதனால் கோவையில் விளையும், இக்காய்கள் ஷார்ஜாவுக்கு அட்டை பெட்டிகளில், கோவை - ஷார்ஜா விமானத்தில் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் இரண்டு டன் வரை, கொண்டு செல்லப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'கோவையிலுள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே நல்ல தரமான இயற்கை முறையில் காய்கறி விளைவிக்கப்படுகின்றன' என்றனர்.விமானத்தில் இடமில்லை'ஏர் அரேபியா 'விமானத்தில் உள்ள 170 இருக்கைகளும் தினமும் நிரம்பி விடுகின்றன. சில நாட்களில் ஏர் அரேபியா, ஏர்பஸ் 320 விமானங்களையும் அனுப்புகிறது. சவூதி அரேபியாவுக்கு காய்கறி அனுப்ப தனி சரக்கு விமானம் எதுவும் இல்லை.