ஆனைமலை;ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் பாம்புக்கழுகுகள் காணப்படுவது, வனத்தின் ஆரோக்கிய குறியீடாக உள்ளது.இந்தியாவில், பொன்கழுகு, புல்வெளிக்கழுகு, சாம்பல் தலை மீன் கழுகு உள்பட, 12 வகையான கழுகுகள் உள்ளன. இவற்றில் பாம்புக்கழுகு எனப்படும் 'கிரெஸ்டெட் செர்பென்ட் ஈகில்', இந்தியா முழுவதிலும் உள்ள அடர் வனங்களில் காணப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கைச்சூழல் பாதிக்காத ஆரோக்கியமான பகுதிகளில் அதிகமான பாம்புக்கழுகுகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து, இரண்டாயிரம் முதல், மூவாயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில், மிக உயரமான மரங்களில் குச்சிகளில் கூடுகள் அமைத்து இவ்வகை கழுகுகள் வசிக்கின்றன.மழை காலத்தில் இனப்பெருக்கம் செய்து, ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. பாம்புகள் தான் இவற்றின் முக்கிய உணவு. பாம்புகள் கிடைக்காத நேரங்களில் தவளை, சிறுவகை பறவைகள், மண்புழுக்களை உட்கொண்டு வாழ்கின்றன.பல சிறப்புகளையுடைய பாம்புக்கழுகுகள், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, நவமலை, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப் மற்றும் பரம்பிக்குளம் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இது ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆரோக்கிய குறியீடாக பார்க்கப்படுகிறது.வனத்துறையினர் தொடர்ந்து வனச்சூழலை மாசடையாமல் பாதுகாத்து வருவதால், பாம்புக்கழுகுகள், இருவாச்சிகள் என, பல பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அழியாமல் உள்ளன.காட்டுயிர் புகைப்படக்கலைஞர் மற்றும் பறவைகள் ஆய்வாளர் அருந்தவச்செல்வன் கூறியதாவது:டிச., மாத துவக்கம் முதல் பாம்புக்கழுகுகளின் இனப்பெருக்க காலம் துவங்குகிறது. இவை மேற்குத்தொடர்ச்சிமலை மட்டுமின்றி, கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் சில பகுதிகளில் காணப்படுகிறது.பருவநிலை மாற்றம், மனிதர்களால் பாதிக்கப்படும் வனச்சூழல் மற்றும் காடுகள் அழிப்பு காரணங்களால், இவற்றின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.பாம்புக்கழுகு அதிகபட்சமாக, 2.5 அடி உயரத்துக்கு வளரும். இனப்பெருக்கத்தின் போது மட்டுமே, ஆண், பெண் பறவைகள் ஒன்றாக இருக்கும். முட்டையிட்டதும் பெண் பறவை அடை காக்கும். பின், ஆண், பெண் இணைந்து உணவூட்டும். மற்ற நேரங்களில் இரண்டும் தனித்தனியே வாழும்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல இடங்கள், மாசடையாமல் ஆரோக்கியமாக உள்ளதால், இவற்றை அதிகமாக பார்க்கமுடிகிறது. பாம்புக்கழுகுகளை காண்பது, அப்பகுதியின் வனச்சூழல் ஆரோக்கியமானது என்பதற்கு சான்று.இவ்வாறு, தெரிவித்தார்.