வால்பாறை:வால்பாறை நகரில், நகராட்சி அலுவலகத்தில் இருந்து, காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோரத்தில் மக்கள் நடந்து செல்லும் வகையில், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.நடைபாதையை ஆக்கிரமித்து கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் மாற்று இடம் வழங்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக மக்கள் நிம்மதியாக நடந்து சென்றனர்.இந்நிலையில், மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். நடைபாதையையொட்டி வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் மக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகருக்கு, பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். மக்கள் நடந்து செல்வதற்காக, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதையை சில வியாபாரிகள் ஆக்கிரமித்து மீண்டும் கடை அமைக்கின்றனர்.இதனால், வாகன நெரிசல் மிகுந்த ரோட்டில் நடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி நடைபாதை ஆக்கிரமிப்புக்களை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.