பொள்ளாச்சி;சி.அர்த்தநாரிபாளையம் கிராமத்தில், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொச்சி முந்திரி மற்றும் கோகோ மேம்பாட்டு இயக்ககம் இணைந்து, கோகோவில் உயர்விளைச்சல் பெறும் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடத்தின.கருத்தரங்குக்கு, முன்னோடி தென்னை விவசாயி சிவன்மலைசாமி தலைமை வகித்தார். தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணீதா முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் விஞ்ஞானிகள் கூறியதாவது:தென்னை விவசாயம் சந்தித்து வரும் வெள்ளை ஈ தாக்குதல், கேரள வேர் வாடல் நோய், நிலையற்ற தேங்காய் விலை உள்ளிட்ட பிரச்னைகளால் ஏற்படும், பொருளாதார சரிவை சமாளிக்க, ஊடுபயிர் செய்வது கட்டாயமாகிவிட்டது. அதில், தென்னந்தோப்பில் நன்கு வளர்ந்து பலனளிக்கும் கோகோ, விவசாயிகளுக்கு நிரந்தர, நீண்ட கால வருவாய் அளிக்கக்கூடியது.கோகோவில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, எதிர் உயிரிகள் பயன்பாடு ஆகிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, விஞ்ஞான ரீதியாக சாகுபடி மேற்கொண்டால், கோகோ லாபகரமான பயிராக அமையும். இவ்வாறு, தெரிவித்தனர்.கருத்தரங்கு ஏற்பாடுகளை, ஆராய்ச்சி நிலைய வேளாண் மேற்பார்வையாளர் சரவணகுமார் செய்திருந்தார். முனைவர்கள் ராஜமாணிக்கம், சிவக்குமார், லதா, மீனா, சுதாலட்சுமி ஆகியோர், பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.