வால்பாறை:கேரள மாநிலம் சாலக்குடிக்கு நேற்று முதல் பஸ் இயக்கப்பட்டதால், இருமாநில மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் இருந்து, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக, கேரள மாநிலம் சாலக்குடிக்கு அரசு மற்றும் தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இது தவிர, சாலக்குடியில் இருந்து மளுக்கப்பாறை வரை, நாள் தோறும் ஐந்து முறை கேரள அரசு பஸ் இயக்கப்படுகிறது. வால்பாறை நகரிலிருந்து, சோலையாறு அணை, மளுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக சாலக்குடிக்கு, இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வால்பாறை - சாலக்குடி இடையே பஸ் இயக்கப்படவில்லை. இதனால், இருமாநில மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில், நேற்று முதல் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு, தனியார் பஸ் இயக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் பஸ் இயக்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.