கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி, வீட்டு 'காஸ்' சிலிண்டர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்காமல், திருத்தணி போலீசார் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் சிலர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர்.கரும்பு தோட்டங்களில் சாராய ஊறலை பதுக்கி, தேவைக்கு ஏற்றவாறு வீடுகளுக்கு ஊறலை எடுத்து சென்று, காஸ் சிலிண்டர் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர்.சாராயம் தயாரானதும், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேவைப்படுவோருக்கு லிட்டர் சாராயத்தை 400 ரூபாய்க்கு விற்கின்றனர்.
இதை, கரும்பு மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் அதிகளவில் வாங்கி குடிக்கின்றனர்.ராமாபுரத்தில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், தெக்களூர், பொம்மராஜிபுரம், மேல் முருக்கம்பட்டு மங்காபுரம், சிங்கராஜபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.அரை லிட்டர், ௧ லிட்டர் வாட்டர் பாட்டில்களில், சாராயத்தை ஊற்றி அதிகளவில் கடத்துகின்றனர்.
இதை மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். மாவட்ட எஸ்.பி., உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- நமது நிருபர்-