குரோம்பேட்டை : கன மழையை தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சுற்றுவட்டார குடியிருப்புகளில், அட்டை பூச்சிகள் படையெடுப்பதால்,மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வரலாறு காணாத அள விற்கு கொட்டி தீர்த்த கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை கிழக்கு பகுதிகளில், தெருக்களிலும், குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
உள் நோயாளிகள் பிரிவு, வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.மற்றொரு புறம், கன மழையின் காரணமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள குடியிருப்புகளில், அட்டை பூச்சிகளின் படையெடுப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனை சுற்றுச்சுவரில் கூட்டம் கூட்டமாகஒட்டிக்கொண்டிருக்கும் அட்டை பூச்சிகள், வீடுகளில் புகுந்து விடுவதால், மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகமும், பல்லாவரம் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, அட்டை பூச்சிகளை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சுற்றுச் சுவரை ஒட்டி, மருத்துவமனையின் கால்வாய் செல்கிறது. அதிலிருந்தே அட்டை பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. ஒவ்வொரு மழைக்கும் அட்டை பூச்சிகள் படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது.
இது தெரிந்தும், அவற்றை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்லாவரம் பிரிவு சுகாதார அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது மருத்துவ வல்லுனர்களை அழைத்து, அட்டை பூச்சிகளை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.வி.சந்தானம், 83, சமூக ஆர்வலர்