வேங்கைவாசல் பெரிய ஏரி மற்றும் சித்தேரி கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், கலெக்டரின் உத்தரவை, ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்தாமல் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில், 102 ஏக்கர்பரப்பளவில் பெரிய ஏரியும், 24 ஏக்கர் பரப்பளவில், சித்தேரியும் உள்ளன. இவை, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.புகார்இதில், பெரிய ஏரி நிரம்பி, வெளியேறும் உபரி நீர், மூன்று கால்வாய்கள் வழியாக, சித்தேரிக்கு செல்ல வேண்டும். சித்தேரி நிரம்பி, வெளியேறும் உபரி நீர், மதகுகள் மற்றும் கலங்கல் வழியாக, விவசாய நிலங்களின் பாசனத்திற்கும், பெரும்பாக்கம் ஏரிக்கும் செல்ல வேண்டும்.
இதில், பெரிய ஏரியில் இருந்து, சித்தேரிக்கு வரும் கால்வாய்களும், சித்தேரியில் இருந்து, பெரும்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய்களும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால், வேங்கைவாசல் பெரிய ஏரி, சித்தேரி ஆகியவற்றின் உபரி நீர், அவற்றின் போக்கு கால்வாய்கள் வழியே, பெரும்பாக்கம் ஏரிக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பெரிய ஏரி மற்றும் சித்தேரி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டு மனைகளாகவும், அவற்றிற்கு செல்லும் சாலைகளாகவும், 2012ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டன.
தீர்மானம்
இதற்காக, 2011ம் ஆண்டு, அப்போதைய ஆளும் தரப்பு அமைச்சரின் அழுத்தத்தால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு இயற்றப்பட்ட தீர்மானத்தை வைத்து, பெரிய ஏரி மற்றும் சித்தேரிகளின் போக்கு கால்வாய்களின் சில பகுதிகள், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டு துார்க்கப்பட்டது.இதனால், ஒன்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு மழைக்கும், ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் உள்ள ஆர்.ஜி.,நகர், சுப்ரமணியம், சண்முகம், சம்பத், ஜீவானந்தம் தெருக்கள், வேங்கைவாசல் பிரதான சாலை ஆகியவற்றில், இடுப்பளவு மழை நீர் தேங்கி நிற்கிறது.
ஆர்.ஜி., நகர், சுப்ரமணியம், சண்முகம், சம்பத், ஜீவானந்தம் தெருக்களில், மூன்று முதல், நான்கு மாதங்கள் வரை தண்ணீர் தேங்குவதால், அந்த பகுதிகளில் வசிப்பவர்கள், கடும் சிரமப்படுகின்றனர்.அதேபோல், வேங்கைவாசல் பிரதான சாலையில், பொது போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. தற்போதைய பருவ மழையால், இந்தாண்டும் மேற்கண்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆய்வுஅப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் அறுந்து விழுந்து, ஐந்து மாடுகள் இறந்தன. தொடர்ந்து, இது பற்றி மாவட்ட கலெக்டர், ராகுல்நாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் 27ம் தேதி ஆய்வு செய்தார்.
அப்போது, கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து, அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். இதையடுத்து, 24 மணிநேரத்திற்குள் 'நோட்டீஸ்' வழங்கி ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.ஆக்கிரமிப்புகளை காலி செய்யாதவர்களின், உடைமைகளை கைப்பற்றி, ஏலம் விடவும் கூறினார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை. இதனால், வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -