மணலிபுதுநகர் : மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய வெள்ளத்தில் கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கொட்டி தீர்த்த கன மழையால், திருவள்ளூர், பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மணலிபுதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.தற்போது, நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், வெள்ளம் மெல்ல வடிய துவங்கி உள்ளது. அதேநேரம், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
தேங்கிய தண்ணீர் தற்போது கழிவு நீருடன் கலந்து கறுப்பாக காட்சியளிக்கிறது. மேலும், மணலிபுதுநகர் முழுதும் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் பாதாள சாக்கடையில் இருந்து, கழிவு நீர் ஆறாக ஊற்றெடுத்து, சாலையில் தேங்குகிறது.இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று பரவல் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் கழிவு நீர் சூழ்ந்துள்ளதால், பலரும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
சிலர் வேறு வழியின்றி அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள்கவனித்து, போர்க்கால அடிப்படையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து, மழைக்கால நோய்களுக்கு, சிறப்பு மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும், வீடுகளில் தேங்கிய, கழிவு நீரை வெளியேற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.