அமைந்தகரை : நண்பனை கொலை செய்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த குற்றவாளிகளை, அமைந்தகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையத் சதாம், 25. இவர், 2015ல் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்னை வந்துள்ளார்.அம்பத்துாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு, அமைந்தகரையில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி வந்தார்.தன்னுடன் தங்கி இருந்த நண்பர்களுக்கு, விலை உயர்ந்த மொபைல் போன் வாங்கித் தருவதாக கூறி, நான்கு பேரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்து உள்ளார்.
அத்திரமடைந்த நண்பர்கள், சையத் சதாமை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதற்கு காரணமான அவரது நண்பர்களான பரத், சதீஷ், சக்திவேல், பிரகாஷ் ஆகிய நான்கு பேரை, அமைந்தகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமினில் வெளியே வந்தவர்கள், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த சதீஷ், 30, பரத், 30, ஆகியோரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். மேலும், இரண்டு பேரை தேடி வருகின்றனர்.