ஸ்ரீபெரும்புதுார் : சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதை தவிர்க்க, காட்டரம்பாக்கம் வழியே செல்லும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில், 'சிப்காட்' தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இருங்காட்டுக்கோட்டை- - காட்டரம்பாக்கம் சாலையை பயன்படுத்தி ஏராளமான தொழிற்சாலை வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலை, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையும், ஸ்ரீபெரும்புதுார் - -குன்றத்துார் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் உள்ளது. தொழிற்சாலை வாகனங்கள் இச்சாலையிலேயே செல்கின்றன.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதை தவிர்க்க, நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் பலர், இருங்காட்டுக்கோட்டை- - காட்டரம்பாக்கம் வழியை பயன்படுத்தி செல்கின்றனர்.குறுகலான இருவழியான இச்சாலையில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.