சென்னை : வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்ததுடன், இழப்பீடும் வழங்காமல் அலட்சியம் காட்டிய கட்டுமான நிறுவனம் மீது, வருவாய் சட்டப்படி 'வாரன்ட்' பிறப்பிக்க, செங்கல்பட்டு கலெக்டருக்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில், தனியார் நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. இதில் வீடு வாங்க, ஆனந்தன், ராமநாதன் ஆகியோர் தனித்தனியாக பணம் செலுத்தினர். இவர்களுக்கு ஒப்பந்தப்படி கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என, கூறப்படுகிறது.இது தொடர்பாக பணம் செலுத்திய இருவரும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.
விசாரித்த ஆணையம், இழப்பீடு வழங்க, 2020ல் தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்தது.இந்த உத்தரவுகளை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், மீண்டும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:வீடு ஒப்படைப்பில் தாமதமானது உறுதியான நிலையில், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதை செயல்படுத்த கட்டுமான நிறுவனம் மறுப்பது தெரிகிறது.எனவே, அந்த கட்டுமான நிறுவனம் மீது வருவாய் மீட்பு சட்டத்தின் அடிப்படையில், 'வாரன்ட்' பிறப்பித்து, செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.