சென்னை : சென்னையில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒமைக்ரான் தொற்று அச்சத்தால், தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், கொ ரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் வெளியில் வரும்போது, முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதேபோல், கொ ரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் தவணை தடுப்பூசி போட்டு, கால அவகாசம் முடிந்தும், 10 லட்சத்து, 39 ஆயிரத்து, 704 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொள்ளாமல் உள்ளனர். இவர்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கும், இன்று மெகா தடுப்பூசி முகாம், 1,600 மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, மாநகராட்சியிடம், 11 லட்சத்து, 83 ஆயிரத்து, 905 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
தற்போது, உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடம் நிலவுவதால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே, டெல்டா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டாலும், உயிரிழப்பை தடுக்கலாம். எனவே, பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.