தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டாரன்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மாணிக்கம், 26; பெயின்டர். இவருக்கு பானு என்ற மனைவி, திவ்யா, 4, என்ற மகள் உள்ளனர். இரு தினங்களாக, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த இவர், நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தந்தை, மகளுக்கு வெட்டு
குன்றத்துார்: குன்றத்துாரை அடுத்த வழுதலம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த், 40; கோவில் சிற்பம் செய்யும் மேஸ்திரி. இவரது மகள், குன்றத்துார் அரசு பள்ளியில் ௧௦ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, ‛டியூஷன்' சென்ற மகளை, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்த போது, வீட்டருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், தந்தை மற்றும் மகளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.புகாரின்படி குன்றத்துார் போலீசார் விசாரித்ததில், ‛டியூஷன்' சென்ற மகளை மர்ம நபர்கள் சீண்டியதும், அதை ரஜினிகாந்த் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டு, மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து வெட்டியதும் தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
குழந்தையை காயப்படுத்தியவர் கைது
பெரவள்ளூர்: சென்னை பெரவள்ளூர், 70 அடி சிவ இளங்கோ சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் வீட்டில், துாத்துக்குடியை சேர்ந்த அவரது நண்பர் ரவீந்திரன், 39, தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் இருந்த ரவீந்திரன், காலி மதுபாட்டிலை வெளியே வீசினார். அது பக்கத்து வீட்டு ஜன்னலில் மோதி உடைந்து, அங்கு துாங்கிய 6 மாத பெண் குழந்தை கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது. புகாரின்படி, பெரவள்ளூர் போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர்.
போதையில் கூவத்தில் சிக்கியவர் மீட்பு
கோயம்பேடு: கோயம்பேடு ரயில் நகர் பகுதி கூவத்தில், நேற்று காலை ஒருவர் முட்புதரில் சிக்கியிருந்தார். தகவலின்படி வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், மரத்தை பிடித்தபடி இருந்த அவரை, கயிறு கட்டி நீந்திச் சென்று மீட்டனர்.விசாரணையில் அவர், கொளத்துாரைச் சேர்ந்த புகழ், 38, என தெரிந்தது. கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் இவர், நேற்றிரவு குடிபோதையில் கூவம் ஆற்றை கடந்த போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின், முள் மரத்தை பிடித்தபடி, இரவு முழுதும் தண்ணீரில் இருந்துள்ளார். அவரை, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பள்ளி மாணவர் தற்கொலை
பீர்க்கன்காரணை: புது பெருங்களத்துார் சீனிவாசன் நகர், திரவுபதி தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ், 45; மேல்மருவத்துார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மகன் கார்த்திகேயன், ௧௭, தாம்பரத்திலுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். சமீபத்தில் பள்ளியில் நடந்த கணக்கு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில் படுக்கை அறைக்குள் சென்றவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், இவரது தாய் மகேஸ்வரி, ௪௦, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்த போது, கார்த்திகேயன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. பீர்க்கன்காரணை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.***
டூ-வீலரில் வைத்த ரூ.4 லட்சம் மாயம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் திருமலை அவென்யூவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ரெட்டி, 72. இவர், வீடு கட்டுமான செலவிற்காக, தன் நண்பரான காலடிப்பேட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம், பணம் கேட்டுள்ளார். நடராஜன் நேற்று காலை, பெரியார் நகரிலுள்ள தனியார் வங்கியில், நான்கு லட்சம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அதை தனது இரு சக்கர வாகனத்தின் 'டேங்க் கவரில்' வைத்து எடுத்துச் சென்ற பிரகாஷ் ரெட்டி, திருவொற்றியூர் மாட்டுமந்தை அருகே வாகனத்தை நிறுத்தி, டீ குடித்தார். திரும்பி வந்து பார்த்த போது, வாகனத்திலிருந்த பணம் மாயமானது தெரிந்தது. புகாரின்படி, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.***
கூரையிலிருந்து விழுந்த வெல்டர் மரணம்
பள்ளிக்கரணை: நன்மங்கலம், அஸ்தினாபுரம் சாலை, 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 43; வெல்டர்.இரு நாட்களுக்கு முன், அதே பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் மேற்கூரை அமைக்கும் போது, தவறி கீழே விழுந்தார்.மார்பகத்தில் பலத்த காயமடைந்து, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.***
10 சவரன் நகை கொள்ளை:
வியாசர்பாடி: சென்னை, வியாசர்பாடி, ஆறுமுகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஜான்சன், 45; இவர், சென்னை கலெக்டரிடம் டபேதராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள அக்கா வீட்டிற்கு துாங்க சென்றார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 10 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது. வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.***
கஞ்சா விற்ற ஒன்பது பேர் கைது
சென்னை: எண்ணுார், தாம்பரம் என, பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, அரும்பாக்கம் பி.எச்., சாலை சிக்னல் அருகே, கஞ்சா விற்ற, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கார்த்திக், 28, அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார்,25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எண்ணுார் தாழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்ற, திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த கார்த்திக், 24, வ.உ.சி., நகரைச் சேர்ந்த அஜித்,21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல, தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 28, உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன், கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா விற்றது தொடர்பாக, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ***
சிறுமி தற்கொலை முயற்சி
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடியிருப்பை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; பிளஸ் டூ மாணவி. இவர், தினமும் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசியதால், தாய் கண்டித்து மொபைல் போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சிறுமி, வீட்டிலிருந்த மாத்திரைகளை சாப்பிட்டு, நேற்று தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். ஆர்.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.