மணலி : வடிகால் வசதியில்லாததால், 200 ஏக்கர் நெற்பயிர், 100 ஏக்கர் வாழை உள்ளிட்டவை, வெள்ள நீரில் மூழ்கி நாசமானதாக, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலம், 16வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நெல், வாழை, கீரை, தர்ப்பூசணி, முலாம் பழம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன.குறிப்பாக, கடப்பாக்கம் ஏரி பாசனம் பெறக்கூடிய வகையில், 300 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் நடக்கிறது. வாழை இலைக்காக, வாழை சாகுபடி நடக்கிறது. பருவமழைக்கு முன்பு, 200 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், பூண்டி ஏரியில் இருந்து, 20 நாட்களாக கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுகிறது.இதனால், இணைப்பு கால்வாய்கள் வழியாகவும், கரை பலவீனம் காரணமாகவும் ஊருக்குள் புகுந்த வெள்ள நீர், பல ஏக்கர் விளைநிலங்களை மூழ்கடித்தது.தேங்கிய வெள்ள நீர் வடிய முறையான வடிகால் இல்லாததால், 20 நாட்களாக நான்கு அடி நீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக வாழைக் கன்றுகளும், ஒரு மாதமாக மழை நீரில் நிற்பதால் அழுகி வருகின்றன.
இதனால், ௧ ஏக்கர் நெற்பயிருக்கு 30 ஆயிரம் ரூபாய், வாழைக்கு, 60 - 70 ஆயிரம் ரூபாயும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.ஆண்டார்குப்பம் - ரெட்ஹில்ஸ் இணைப்பு சாலையை ஒட்டி, ஆண்டார்குப்பம், காமராஜபுரம், அரியலுார் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கினால், வடிகால் வழியாக சாலையை கடந்து, புழல் உபரி கால்வாயுடன் இணையும் இணைப்பு கால்வாய்க்கு செல்லும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடிகால் வசதி வேண்டும்
தற்போது, ௫ ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய நெல் வகையான மாப்பிள்ளை சம்பா பயிரிட்டுளேன். 180 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பயிர், 100 நாளில் வெள்ளநீரில் மூழ்கி அழுகியுள்ளது. தண்ணீர் முழுவதுமாக வடிய, ஒரு மாதமாகி விடும். அரசாங்கம் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டாம். தனியார் நிறுவனங்களால் அடைபட்டிருக்கும் வடிகாலை மீட்டு, தண்ணீர் வெளியேற வழி செய்து கொடுத்தாலே போதும்.எம்.சாரதி, 52 விவசாயி, கன்னியம்மன்பேட்டை, மணலி.விவசாயத்தை காக்க நடவடிக்கை தேவைஇளைஞர்களை விவசாயம் பக்கம் வரவழைக்கும் முயற்சிகள், இதுபோன்ற பாதிப்புகளால் தோல்வியில் முடிகிறது. 52 சென்ட் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளேன்.
முழுதும் வெள்ளநீரில் மூழ்கி விட்டன. சில இடங்களில், நெற்கதிர்கள் பச்சையாக இருப்பதால் பாதிப்பில்லை என, பார்ப்பவர்கள் கூறுகின்றனர். நெற்பயிரின் அடிப்பாகம் நீர் தேக்கத்தால் அழுகியுள்ளது. தண்ணீர் வற்றியதும், நெற்கதிர்கள் அப்படியே சாய்ந்து விடும். அறுவடைக்கு காத்திருந்த நேரத்தில், நெற்கதிர்கள் மூழ்கியது, கண்ணீரை வரவழைத்தது.
இதற்கு காரணம், விளைநிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற இருக்கும் வடிகால் அடைப்பு மற்றும் துண்டிப்பு தான். சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து, போக்கு கால்வாய்களை, புழல் உபரி கால்வாயுடன் இணையும், இணைப்பு கால்வாய்களில் இணைக்க வழிசெய்ய வேண்டும்.ஐ.சண்முகம், 83 விவசாயி, ஆண்டார்குப்பம், மணலி.