தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் நெருப்புக் கோழிகள் உயிரிழக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,400க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.இதில், கடந்த அக்., 27ம் தேதி ஐந்து, 28ல் மூன்று, நவ., 2ம் தேதி ஒன்று என, மொத்தம் ஒன்பது நெருப்புக் கோழிகள் இறந்தன.நெருப்புக் கோழிகளின் கூண்டுகளை இடமாற்றம் செய்வதில் அலட்சியம் காட்டி வருவதும், பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிப்பில், ஊழியர்களின் கருத்துகளை பூங்கா நிர்வாகம் கேட்க மறுப்பதுமே, இதற்கு காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு நெருப்புக் கோழிகளும், பூங்காவிற்கு எதிரே உள்ள வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்த ஐந்து நெருப்புக் கோழிகளில், இரண்டு நெருப்புக் கோழிகளும் இறந்துள்ளன.எனினும், நிர்வாகம் இது பற்றி முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இது ஒருபுறமிருக்க, பூங்காவில் பறவைகள் மற்றும் வெள்ளை புலிகள் வாழ்விடத்தில் உள்ள அகழியில், சமீபத்தில் பெய்த மழையால் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த அகழிகள் முறையாக பராமரிக்கப்படாததால், தண்ணீரில் துாசி படர்ந்து, பச்சை நிறமாக மாறியுள்ளது.சுகாதாரமற்ற இந்த நீரை அருந்தும் பறவைகள், விலங்குகள் நோய் வாய்ப்பட வாய்ப்புள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.உயரதிகாரிகள் பூங்காவில் ஆய்வு செய்து, பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிப்பில் ஊழியர்களின் கருத்துகளையும் கேட்டு நடக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.