பொங்கலுார்:தொடர் மழையால், நாற்றுக்கள் வீணாகி வருவது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.கார்த்திகை பட்டத்தில் நடவு செய்வதற்காக நாற்றுப் பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகளை தயார் செய்து வைத்திருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகளால் உழவுப் பணி மேற்கொள்ள இயலவில்லை.நாற்று உற்பத்தி செய்ததில் இருந்து, 25 நாட்களில் நடவு செய்ய வேண்டும். மழை சராசரியாக பெய்து இருந்திருந்தால் ஐப்பசி மாத இறுதியிலேயே விவசாயிகள் நடவு பணியை துவக்கி இருப்பர்.மழை நீடித்ததால் நடவுப்பணி தாமதமாகி விட்டது. இதனால், நாற்றுகளுக்கு வயது அதிகமாகிவிட்டது. வயது அதிகமான நாற்றுகளை நடவு செய்தால் மகசூல் பாதிக்கும் என்பதால் அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பண்ணைகளில் ஏராளமான நாற்றுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நாற்று உற்பத்தி செய்பவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.