திருப்பூர்:பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மறியல் செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்டது, எஸ்.வி. காலனி பகுதி. ஓம் சக்தி கோவில் ரோட்டில் இதன் எட்டாவது வீதி உள்ளது. இதில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இதிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும், சுற்றுப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது.இதனால், அவதிப்பட்ட அப்பகுதியினர் இது குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், பா.ஜ., நிர்வாகிகள் தலைமையில், ஓம் சக்தி கோவில் பிரதான ரோட்டில் மறியல் செய்தனர்.இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வடக்கு போலீசார் அங்கு விரைந்தனர்.பிரச்னைக்குரிய இடத்தில் பார்வையிட்ட போலீசார், மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு காண்டு வரவழைத்தனர்.உடனடியாக சாக்கடை உடைப்பு பிரச்னைக்கு தீர்வு காண உறுதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.