திருப்பூர்;வெளிநபர்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கக்கோரியும், கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள், நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.பொங்கலுார் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கிருஷ்ணாபுரத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பி.ஏ.பி., வாய்க்காலுக்கு வடபுறப்பகுதியில், அரசு தரப்பில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதற்கு, கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், வருவாய்த்துறை சார்பில், பட்டா வழங்கப்பட்ட இடத்தில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்தது. பொதுமக்கள் திரண்டுவந்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.இச்சூழலில் நேற்று, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீதுவிடம் மனு அளித்தனர்.மனு விவரம்:பொதுமக்கள் நலன் கருதி, ரேஷன் கடை, குழந்தைகள் விளையாட்டு மைதானம், இலவச வீட்டு மனை பட்டா, பள்ளி, சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும். விவசாய விளை பொருட்களை வைக்க உலர்களம், கோவில், சுகாதார வளாகம், மயானம் வேண்டும். இவற்றுக்குதேவையான இடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கி தர வேண்டும். வெளிநபர்களுக்கு பட்டா வழங்க கூடாது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.