திண்டுக்கல் : 'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
துவக்க, நடுநிலை வகுப்பு மாணவர்கள் கடந்தாண்டு முழுதும் பள்ளிக்கு வராததால் ஏற்பட்ட கற்றல் குறைப்பாட்டை சரி செய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல்லில் 12 ஆயிரத்து 666 தன்னார்வலர்கள் விண்ணப்பித்தனர். அதில் முதற்கட்டமாக 40 பேரை தேர்வு செய்து மாணவர்கள் வீட்டருகே சென்று பாடம் கற்பிக்கப்படுகிறது.இந்நிலையில் இத்திட்டத்திற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் உங்கள் பகுதியில் உள்ள தன்னார்வலர்களை அறிந்து கொள்ளும் வசதி, கற்றல் வளங்கள், கற்பித்த பாடங்கள் போன்றவை அடங்கியுள்ளன. பிளே ஸ்டோரில் 'Illam Thedi Kalvi' செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பள்ளி தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள் அதில் தங்களுக்கான 'லாக் இன் ஐடி.,' , 'கடவுச்சொல்'லை கொடுத்து உள்ளே நுழையலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.