ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள 'டிவி' ஒளிபரப்பு டவர், 27 ஆண்டுக்கு பின் 2022 ஜூனில் எப்.எம்.ரேடியோ அலைவரிசையை ஒலிபரப்புகிறது.
ஆசியாவிலேயே மிக உயரமான 1060 அடி 'டிவி' ஒளிபரப்பு டவர் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டு 1995 முதல் பயன்பாட்டிற்கு வந்தது. சிமென்ட் கான்கிரீட் கலவையில் அமைந்த இந்த டவரில் இருந்து பொதிகை, டி.டி., சேனலை ராமேஸ்வரம் சுற்றுப்புற பகுதியிலும் இலங்கையின் மன்னார், யாழ்ப்பாணம் கடலோர பகுதியிலும் ஒளிபரப்பினர்.
டிச.,31 ல் 'டிவி' ஒளிபரப்பை நிறுத்திட மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு பதிலாக எப்.எம்., ரேடியோவின் 'ரெயின்போ' அலைவரிசையை ஒலிபரப்ப, சில மாதமாக டவர் நிலையத்தில் 100 கிலோ வாட்ஸ் கொண்ட டிரான்ஸ் மீட்டர் பொருத்தி சோதனை ஓட்டமாக ஒலிபரப்பப்படுகிறது.
2022 ஜூனில் அதிக திறன் கொண்ட டிரான்ஸ்மீட்டர் பொருத்தி எப்.எம்., ரேடியோ அலைவரிசையை ஒலிபரப்ப உள்ளனர். இங்கு பணிபுரியும் துணை இயக்குனர், பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 13 பேரில், சிலர் மட்டுமே ராமேஸ்வரத்தில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் பிறபகுதிக்கு இடமாறுதல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள தகவல் தொடர்புதுறை துணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில் :2022 ஜூனில் 20 ஆயிரம் கிலோவாட்ஸ் டிரான்ஸ்மீட்டர் பொருத்தி, 150 கி.மீ., சுற்றளவில் அதாவது மதுரை, இலங்கை வடகிழக்கு கடலோர பகுதியை தாண்டி அங்குள்ள 60 சதவீத நகரம், கிராம பகுதியில் எப்.எம்., ரேடியோவின் ரெயின்போ அலைவரிசையை ஒலிபரப்ப முடியும். மேலும் கடலில் உள்ள மீனவர்களுக்கு பேரிடர் தகவல்கள், விவசாயிகளுக்கான தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைக்கும் என்றார்.