பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் கைது செய்து அழைத்து வரப்பட்ட, முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர், கோர்ட் வளாகத்தில் புதிய செருப்பு வாங்கித்தரச் சொல்லி, போலீசாரிடம் 'சேட்டை' செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி, கோமங்கலம்புதுாரை சேர்ந்தவர் அருண்பிரசாத்,28. இவர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக இருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால், கடந்த மாதம், 14ம் தேதி, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கோமங்கலம் கிளை செயலாளர் சிவக்குமார் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சிவக்குமாரின் மனைவி கொடுத்த புகாரின்படி, கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி ஜே.எம்., எண் 2 கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாட்கள் சிறை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் செல்லையா உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி கிளை சிறைக்கு வர, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல், போலீசாரை ஒருமையில் பேசியதுடன், செருப்பு வாங்கி கொடுத்தால் தான் வருவேன் என, அடம் பிடித்துள்ளார். அதன்பின், போலீசார் புதிய செருப்பு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'அருண்பிரசாத், கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததால் செருப்பு அணியாமல் இருந்தார். சிறையில் அடைப்பதற்கு முன், மாலையை கழற்றியதால் செருப்பு வேண்டும் என்று கேட்டார். வாங்கி கொடுத்தோம்' என்றனர்.