ஆத்தூர் : நடுப்பட்டி பகுதியில் கலனில் சேமித்த வெங்காயத்தின் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. அவற்றை விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடக்கிறது.ஆத்தூர் ஒன்றியம், என்.பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, தொப்பம்பட்டி, நடுப்பட்டி, கெண்டிச்சம்பட்டி, குரும்பபட்டி பகுதியில் வெங்காய சாகுபடி நடக்கிறது.
விவசாயிகள், சிறு வியாபாரிகள் சாகுபடி நேரத்தில் வெங்காயம் கொள்முதலில் ஈடுபடுவர். இவற்றிற்கான கலன் (படைப்பு) அமைத்து சேமிப்பர். விதைப்பு, விலை உயர்வு சூழலில் விற்பனைக்கு அனுப்புவர். கடந்த 5 மாதங்களுக்கு முன் மகசூல் பெற்ற வெங்காயத்தை பலரும் கலனில் சேமித்தனர். சமீபத்திய மழையால் ஈரத்தன்மை அதிகரித்து, கலன் கலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடுப்பட்டி விவசாயி பாண்டி கூறுகையில், "அகலமாக அமைத்த கலன்களில், ஈர பிரச்னை உள்ளது. கிலோ 40 முதல் 70 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ப, விலை நிலவரம் உள்ளது. வெங்காயத்தை உலர்த்தி,விதைப்பு, சமையலுக்கு ஏற்ப ரகம் பிரித்து மூடை இடப்படுகிறது. சிறு வியாபாரிகளும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். குறுகிய அகலத்தில் அமைத்த கலன்களில், ஈர பிரச்னை குறைவு," என்றார்.