பழநி : பழநி காந்தி ரோட்டில் பழைய நகராட்சி வளாகத்தில் இணையதளத்திற்காக எடுக்கப்பட்ட படப்பிடிப்பால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
பழநி பகுதியில் சில நாட்களாக சினிமா , இணையதள (வெப்சீரிஸ்) படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காந்தி ரோடு பகுதியில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட வளாகம் உள்ளது. தற்போது இவ்வளாகத்தில் ஆதார் கார்டு திருத்தும் மையம் உள்ளது.
நேற்று இந்த வளாகத்தில் இணையதள படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் ஆதார் கார்டு திருத்தம் செய்யவோ, புதுப்பிக்கவோ அங்கு செல்ல இயலவில்லை. அங்கு செல்லும் மக்களை படப்பிடிப்பு குழுவினர் தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும் படப்பிடிப்பு வாகனங்கள் அப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மாலையில் அங்கு மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.