குன்னுார்:குன்னுார் நிலச்சரிவு அபாயமுள்ள இடங்களில் மீண்டும் பொக்லைன் பயன்படுத்தி, மலையை அழிக்கும் செயல் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மழை கால பேரிடரால் நிலச்சரிவு ஏற்படுவதுடன், உயிர் சேதம் ஏற்படுவதால், மலைப்பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொக்லைன் பயன்படுத்தவும், பாறைகள் உடைக்கவும் தடை உள்ளது.எனினும், சில இடங்களில் விவசாயம் என்ற பெயரில் அனுமதி பெற்று பொக்லைன் பயன்படுத்தி மலையை குடைந்து சாலை அமைப்பதும், கட்டுமான பணிகள் நடப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், காந்திபுரம் அருகே, மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்கனவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில், இரு பொக்லைன் இயக்க, கடந்த, 17ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதே போல, புரூக்லேண்ட், அதிகரட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் பயன்படுத்தி மலை பகுதிகள் அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.டி.ஆர்.ஓ., கீர்த்தி பிரிய தர்ஷினி கூறுகையில்,''குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.