பந்தலுார்:முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு, மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ், பந்தலுார் அருகே சன்னக்கொல்லி வனப்பகுதியில் இடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், வாசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நுாற்றாண்டு பழமையான பட்டியல் வகை மரங்கள் அடியோடு வெட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில், கூடலுார் வன அலுவலர் கொம்முஓம்காரம், மாற்றிட திட்ட வனச்சரகர் மனோகரன், வனவர் பரமேஸ்வரன், வி.ஏ.ஓ. செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறுகையில்,''சம்பந்தப்பட்ட இடம் கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மலைப்பகுதி மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்ய இயலும். எனினும், அனுமதி இன்றி பழமையான மரங்கள் வெட்டியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இததனை கண்டுகொள்ளாமல், பணியில் அலட்சியமாக இருந்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.