பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதி ரோட்டோரம் யானைகள் கூட்டமாக வலம் வருகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும், என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, மான், புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.இந்நிலையில், தொடர் மழை காரணமாக வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. தடுப்பணைகளிலும் நீர் வரத்து உள்ளதால், வன விலங்குகளுக்கு தட்டுப்பாடின்றி நீர் கிடைக்கிறது.வனத்தில் வாழும் யானைகள், டாப்சிலிப் செல்லும் ரோட்டில், கூட்டமாக ஓய்வு எடுக்கின்றன. குட்டி யானைகளுடன் வலம் வரும் கூட்டம், சிலமணி நேர ஓய்வுக்கு பின் வனப்பகுதிக்கு திரும்புகின்றன. தொடர் மழையால் வனப்பகுதிக்குள் கொசுத்தொல்லை அதிகரிப்பு காரணமாக, யானைகள் இது போன்று வெளியே வந்து செல்வதாக வனத்துறையினர் கூறுகின்றனர். ரோட்டோரம் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ''டாப்சிலிப் பகுதியில், யானைகள் ரோட்டோரம் வரத்துவங்கியுள்ளன. எப்போது வேண்டுமென்றாலும் வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வ கோளாறில் காரை நிறுத்தி யானைகளை போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. காரை நிறுத்தி அதன் அருகே செல்வது ஆபத்தானது.அவ்வாறு, இடையூறு செய்தால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை சார்பில், ரோட்டோரத்தில் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது,' என்றனர்.வால்பாறைவால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. குறிப்பாக மயிலாடும்பாறை, பன்னிமேடு, முருகாளி, முடீஸ் முத்துமுடி, தோணிமுடி, ைஹபாரஸ்ட், வாகமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, முடீஸ் பகுதியை சுற்றிலும் யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.