உடுமலை:தொடர் மழையால், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, பந்தல் காய்கறி சாகுபடி முற்றிலுமாக பாதித்துள்ளது; அறுவடையும் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, விளைநிலங்களில் பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலங்காய், பாகற்காய் உட்பட பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதில், பந்தல் அமைப்பதற்கு, ஏக்கருக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு பிடிக்கிறது. மேலும், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், கூடுதலாக செலவிடுகின்றனர். இந்நிலையில், நடப்பு சீசனில், வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ததால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, வேர் அழுகல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் சாகுபடியில் ஏற்பட்டு, செடிகள் கருகி வருகிறது.அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், விளைநிலங்களுக்குள் சென்று, காய்களை பறிக்கவும், வழியில்லாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'வழக்கத்தை விட, கூடுதலாக பெய்த மழையால், விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால், செடிகள் முற்றிலுமாக அழுகி, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக, ஆய்வு நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்,' என்றனர்.