உடுமலை:வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், மாவட்டத்திலேயே, அதிகளவாக, உடுமலை பகுதிகளில், 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆறு திட்டங்களின் கீழ், 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படும் நிலையில், நடப்பாண்டு, 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 422 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இதில், உடுமலை பகுதிகளில், விவசாய நிலங்கள், ஊராட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், குளம், குட்டைகளின் கரைகள், பொது இடங்கள், தொழிற்சாலை வளாகங்கள் என, 107 இடங்களில், 80 ஆயிரத்து, 74 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.நேற்று, குடிமங்கலம் ஒன்றியம், லிங்கமநாயக்கன்புதுாரைச்சேர்ந்த, வெங்கடேசிற்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, செம்மரம் என, 750 நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. பெரியபட்டி அருகேயுள்ள அப்பிலிபட்டியைச்சேர்ந்த, பிரபுவுக்கு சொந்தமான நிலத்தில், சவுக்கு, தேக்கு, கருமருது, பழவகை மரங்கள் என, 4,813 மரக்கன்றுகள் நடப்பட்டன.குறிச்சிக்கோட்டை, மதிவாணனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், சவுக்கு, குமிழ், தேக்கு, கடுக்காய் என, 538 மரக்கன்றுகளும், மடத்துக்குளம் கடத்துாரைச்சேர்ந்த மோகன் நிலத்தில், தேக்கு, வேம்பு என, 440 மரக்கன்றுகளும் நடப்பட்டன.மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.