கள்ளக்குறிச்சி-தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர், நாடாளுமன்றத்தில் பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றியுள்ளார். மேலும், கவர்னரை நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதனடிப்படையில், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால், தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு தனியார் பயிற்சி வகுப்பிற்குச் செல்ல 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.இந்த தொகையை நடுத்தர, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களால் செலுத்த முடிவதில்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும். எனவே, மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்க அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.