மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், ஒன்பது இடங்களில் ரயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதைகள் அமைப்பதற்கு உலகலாவிய அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையேயான மெட்ரோ பாதையில், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, 35.67 கி.மீ., மாதவரம்- சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதையில், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே, 16.34 கி.மீ., என, 52.01 கி.மீ., பாதை அமைக்கப்படுகிறது. இத்துடன், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.01 கி.மீ., பாதை அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பாதைகளிலும், மொத்தம், 78.02 கி.மீ., மெட்ரோ பாதை பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
பணி விபரங்கள் குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் மெட்ரோ பாதையில் முழுவதுமாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அய்யப்பன்தாங்கல் - ராமசந்திரா மருத்துவமனை - போரூர் இடையேயான பாதையில், ஆரம்பகட்ட பணிகள் முடிந்து, துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது அய்யப்பன்தாங்கல் - ராமச்சந்திரா மருத்துவமனை இடையே, துாண்கள் அமைக்கும் பணி, 40 சதவீதம் முடிந்துள்ளது.
அய்யப்பன்தாங்கல் - கரையான்சாவடி இடையே, ஆரம்பக்கட்ட பணி துவங்கப்பட்டுள்ளது ஆவிச்சி பள்ளி - சாலிகிராமம் - வடபழநி - பவர்ஹவுஸ் இடையே மெட்ரோ துாண்கள் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணியுடன், துாண்கள் நிறுவும் பணியும் நடந்து வருகிறது
மாதவரம் பால்பண்ணையில், மெட்ரோ நிலையம் அமையும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் நிறுவப்பட்டு, நிலையங்களுக்கு தேவையான இடங்கள் சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது
மாதவரம் - சி.எம்.பி.டி., மற்றும், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை இடையிலான பணிகளுக்கு, கட்டுமான ஒப்பந்தங்கள் முடிந்து, மாதவரம், தபால் பேட்டை, முராரி மருத்துவமனை இடையே ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன
மாதவரம் - தரமணி இணைப்பு சாலை மெட்ரோ பாதையில், அயனாவரம், புரசைவாக்கத்தில், பாதைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிக்கு, இயந்திரங்களால் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது
ராயப்பேட்டையில் பாதை அமைக்க தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு, ஆரம்பக்கட்ட பணி நடந்து வருகிறது. கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையம் அமையும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன
திருவான்மியூரில் டைடல்பார்க், தரமணி இணைப்பு சாலை வரை பாதையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றனசென்னையில் அதீத கனமழை பெய்த போதும், பணிகள் தொடர்ந்தன. தற்போது, ஓரிரு நாட்களாக மழை பெய்யாததால், மெட்ரோ பணிகள் வேகம் எடுத்துள்ளன.
மெட்ரோ பாதையில் மழை நீர் சூழ்ந்த இடங்களில் மட்டும் அவ்வப்போது, சிலமணி நேரங்கள் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டது.இப்பாதை பணிகளை, 2025ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறனார்.
-நமது நிருபர்-