சென்னை : வடகிழக்கு பருவமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் மோசமாக சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை மட்டுமே பணிகளை துவங்கி உள்ளது. மாநகராட்சியும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் அலட்சியமாகவே உள்ளன.
சென்னையில் 471 பேருந்து வழித்தட சாலைகள், 387 கி.மீ., நீளத்திற்கு மாநகராட்சி பராமரிப்பிலும், 260 கி.மீ., சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பிலும்உள்ளன. இவற்றை தவிர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிப்பில், 50 கி.மீ., சாலை உள்ளது. இவற்றின் வழியாக நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, நடப்பாண்டு துவக்கத்தில், பெரும்பாலான சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. அக்டோபர் முதல் சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதீத கன மழையால் சென்னையில் உள்ள மாநகராட்சி சாலைகள் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்த நிலையில், வாகனங்களின் நடமாட்டம் காரணமாக சாலை பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியும் உருவாகியுள்ளது.
தற்காலிக சீரமைப்பு
இதனால், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும், மாநகராட்சி பரமாரிப்பில் உள்ள பல முக்கிய சாலைகளும் சேதமடைந்துள்ளன. இச்சாலைகளில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலக நெரிசல் நேரங்களில், போக்குவரத்து சிக்னலை கடக்க 15 நிமிடங்கள் வரை ஆகின்றன.
மழை ஓய்ந்த நிலையில், அண்ணா சாலையில், தேனாம்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், நெடுஞ்சாலைத் துறை சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இதேபோல, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை, அடுத்தடுத்து விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
மாநகராட்சியும் தற்காலிக சீரமைப்பு பணிகளை துவங்கிவிட்டதாக தெரிவிக்கிறது. ஆனால், எங்கும் வேலை நடந்தது போல தெரியவில்லை. அதே நேரம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைப்பு பணிகளை இன்னமும் துவக்கவில்லை. மழையால் சாலைகள் சேதமடைந்து இருப்பதுடன், புழுதிக்காற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரிக்கும்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தை சந்தித்து வருகின்றனர்.
மழை ஓய்ந்துள்ள நிலையில், சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து துவங்கவும், சாலைகளில் துாசி பறக்காத வகையில், 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' எனப்படும் பெருக்கும் இயந்திரங்கள் வாயிலாக, சாலை மண் குவியலை அகற்றவும் அந்தந்த துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்க கட்டண வசூல் ரத்தாகுமா?
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. சென்னை- - கோல்கட்டா, சென்னை - -திருப்பதி, சென்னை - -திருச்சி, சென்னை - -பெங்களூரு, சென்னை பை - பாஸ் சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. மொத்தம், 400 கி.மீ., வரை உள்ள இந்த சாலைகள் வழியாக கனரக மற்றும் சரக்கு வாகனங்களும் அதிகளவில் செல்கின்றன. வெளியூர் செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் இச்சாலைகளை நம்பியுள்ளன.
சமீபத்திய மழைக்கு இச்சாலைகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சென்னை - -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சென்னை பை - பாஸ் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன. ஜி.எஸ்.டி., சாலையிலும், பெருங்களத்துார் பஸ் நிலையம், வண்டலுார் மேம்பாலம் அருகே, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் சாலை பெயர்ந்து, ஜல்லி கற்களாக காணப்படுகின்றன.
இச்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தனியாகவும், பராமரிப்பதற்கு தனியாகவும், இரண்டு நிறுவனங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்துள்ளது. அடுத்து வரவுள்ள மழையை காரணம் காட்டி, சாலையில் தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொள்ள பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் தயக்கம் காட்டுகிறது. சாலையை சீரமைக்கும் வரை, இச்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டட இடிபாடுகள் வேண்டாம்!
சென்னையில் சில இடங்களில் கட்டட இடிபாடுகளை கொட்டி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் காற்று மாசுபாடு அதிகம் என்பதால், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், கட்டட இடிபாடுகளை கொட்டி சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க தடை விதிக்கப்பட்டது.
ஈரமான சாலையை சூடுபடுத்தி, தார் ஊற்றும் இரண்டு வாகனங்கள் தலா 1 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை பயன்படுத்தி, தார் கலவை வாயிலாக சாலைகளை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், டில்லியை போன்று சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கும்.
13 ஆயிரம் பள்ளங்கள் சீரமைப்பு
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் 471 பேருந்து சாலைகள், 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகள் உள்ளன. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து உள்ளன.சேதடைந்துள்ள சாலைகள் உடனடியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4,248 சாலைகளில், 13 ஆயிரத்து, 492 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. சிமென்ட் கலவை, குளிர்ந்த தார் கலவை வாயிலாக சீரமைக்கப்பட்டதில், தற்போது வரை, 1 கோடியே 4 லட்சத்து, 8,103 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சாலையை சூடேற்றி சீரமைக்கும் நவீன இயந்திரம்
மழைக்காலங்களில் சாலை ஈரமாக இருக்கும் என்பதால், தார் கலவை போடும் போது, அவை வாகன நடமாட்டத்தில் உடனுக்குடன் பெயர்ந்து விடும். அத்தகைய நேரங்களில் சாலையை சற்று சூடேற்றி, தார் கலவை அமைத்தால் சேதம் ஏற்படாது. இதுபோன்று சாலை அமைக்க, 'பாட் ஹோல் ரிப்பேரிங் மிஷின்' எனப்படும் நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் ஜல்லி, தார், எமர்ஷன் சேர்த்தால், அதுவே தார் கலவையை தயாரித்து, பள்ளமான இடங்களில் கொட்டிவிடும்.
அதன் மேல் ரோலர் அல்லது கட்டையை பயன்படுத்தி, சாலை சமன் செய்யப்படும். இந்த இயந்திரத்தின் விலை 50 லட்சம் ரூபாய். பீஹார் மாநிலத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து, அ.தி.மு.க., ஆட்சியில் இந்த இயந்திரங்களை, நெடுஞ்சாலைத் துறை கொள்முதல் செய்தது. இதுபோன்ற இயந்திரத்தை, சென்னை மாநகராட்சியும் கொள்முதல் செய்தால், மழைக்காலத்தில் ஏற்படும் சாலை சேதங்களை உடனுக்குடன் சரிசெய்ய முடியும்.