சின்னசேலம்-சின்னசேலம் நகரில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.சின்னசேலம், மூகாம்பிகை நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை வசதி இல்லாததால், மழை பெய்தால் சாலைகள் சேறும் சகதிமாக மாறி விடும்.இது குறித்து சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பெய்த மழையால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர் கூகையூர் சாலையில் நேற்று காலை 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, தாசில்தார் அனந்தசயனன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 11:30 மணியளவில் கலைந்து சென்றனர்.