பறிமுதல் சொத்துக்கள் ஏலம் எப்போது? நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பரிதவிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பறிமுதல் சொத்துக்கள் ஏலம் எப்போது? நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பரிதவிப்பு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

04 டிச
2021
11:52
பதிவு செய்த நாள்
டிச 04,2021 11:51

கோவை: நிதி மோசடி வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விடாமல் இழுத்தடிப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், 1990க்கு பிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல உருவாகின. அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் டிபாசிட் திரட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள், ஒரு சில ஆண்டுகளிலேயே மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை, 1997ல் தமிழக அரசு இயற்றியது. இதற்கென சிறப்பு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. தமிழக போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு, 2000ம் ஆண்டு ஜன.,1 முதல் செயல்பட தொடங்கியது. தமிழகத்தில் இந்தாண்டு செப்.,1 வரை, மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, 2101 வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். இவற்றில், 245 வழக்குகள் போலீஸ் விசாரணையில் உள்ளன. 418 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது.

பணம் திருப்பி தந்தது உள்ளிட்ட காரணங்களால், 592 வழக்குகளில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 72 வழக்குகள், மற்ற பிரதான வழக்குகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. 159 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 326 வழக்குகளில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகையை மோசடி செய்த நிறுவனத்தினர் திருப்பி தந்து விட்டனர். 131 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.


15 லட்சம் பேர் பாதிப்பு


இதுவரை நடந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டோர், 15 லட்சத்து 84 ஆயிரத்து 836 பேர். ஏமாற்றப்பட்ட மொத்த முதலீட்டுத்தொகை 6,067 கோடி ரூபாய். இதில், 7 லட்சத்து 36 ஆயிரத்து 573 பேருக்கு முதலீட்டுத்தொகை 1,582 கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டுள்ளது. அதாவது, 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 4500 கோடி ரூபாய் இன்னும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.மோசடி செய்த முதலீட்டாளர்களின், 1998 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. இந்த சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை, அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் செய்ய வேண்டும்.

ஆனால், பல்வேறு காரணங்களால், ஏலம் விடாமல் சொத்துக்கள், கோப்புகளில் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டில் வழக்கு முடிந்தவுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக போலீசார் ஒதுங்கிக் கொள்கின்றனர். இத்தகைய நடைமுறை, பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
இதனால், பணத்தை கடைசி வரை திரும்பப் பெறாமலேயே முதலீட்டாளர்கள் இறந்து போகும் அவலமும் நடக்கிறது. ஆமை வேக அரசு நடைமுறைகள், முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.பறிமுதல் சொத்துக்களை விரைந்து ஏலத்தில் விடவும், பாதிக்கப்பட்டோருக்கு முதலீடு திரும்பக் கிடைக்கவும் செய்யும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X