பொள்ளாச்சி: கல்லார் பழங்குடியின மக்களுக்கு அரசு பட்டா வழங்கியது. அங்கு, அவர்கள் அமைத்த குடிசைகளை வனத்துறையினர் பிரித்து வீசினர்.
கோவை மாவட்டம், வால்பாறை கல்லாரில் காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 2018ல், கனமழைக்கு வீடுகள் மண்ணில் புதைந்தன. மாற்று இடம் தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதையடுத்து, வால்பாறை தாசில்தார் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் தெப்பக்குளம் மேடுபகுதியில் நிலஅளவை செய்தனர். கடந்த மாதம், வால்பாறையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கல்லார் பழங்குடியின மக்களுக்கு தெப்பக்குளம் மேடுப்பகுதியில் வீடு கட்ட தலா, 1.5 சென்ட் இடத்துக்கு பட்டா வழங்கினார்.
கடந்த ஒரு வாரமாக, பழங்குடியின மக்கள் தெப்பக்குளம் மேடுபகுதியில் குடிசையிடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, தெப்பக்குளம் மேடுபகுதிக்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், குடிசைகளை பிரித்து அகற்றினர்.இந்த பிரச்னை குறித்து, பொள்ளாச்சி சப் - கலெக்டர் தாக்கரே ஞானதேவிடம், புகார் அளிக்கப்பட்டது.
காரணம் என்ன?
பழங்குடியின மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், 'அனுமதித்த இடத்தில் குடிசை அமைத்தபோது, வனத்துறையினர் பிரித்தனர். என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றனர். வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்லார் பழங்குடியின மக்களுக்கு தெப்பக்குளம் மேடுபகுதியில் வீடு கட்ட தலா, 1.5 சென்ட் இடம் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் குடிசையிட்டதால் அகற்றினோம்' என்றனர்.