கோவை: கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், இடப்பற்றாக்குறையால் ஆவணங்களைப் பாதுகாக்க முடியாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. வெறும் இரண்டு அறைகளில், ஒன்று வழக்கு விசாரணை பகுதியாகவும், மற்றொரு அறை அலுவலக அறையாகவும் உள்ளது. இந்த அறையும், 10க்கு 16 என்ற அளவில் மிகச்சிறியதாக உள்ளது.குறைதீர் ஆணையத்தில் 10 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அமர்வதற்குக் கூட இடமில்லை. ஆவணங்களை, இரு அறைகளிலும் மாற்றி மாற்றி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டம் என்பதாலும், குறைதீர் ஆணைய தலைவர் பதவி காலியாக இருப்பதாலும், வழக்குகள் நடத்தப்படவில்லை; வழக்கில் தொடர்புடையோர் நேரில் வருவதில்லை. இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அனைவரும் வரத் தொடங்கினால் நிற்பதற்குக் கூட இடமிருக்காது.எனவே, நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஊழியர்கள் கூறியதாவது:கோவையில் மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குறைதீர் மன்றங்கள் வாடகை கட்டடங்களில் தான் செயல்படுகின்றன. கோவையின் நிலை மிக மோசம். போதிய இடவசதியின்றி, இரண்டே அறைகளில் செயல்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என, நீண்டகாலமாகக் கோரி வருகிறோம்.இடம் தந்தால் போதுமானது. கட்டடம் கட்டிக் கொள்ள நிதி உள்ளது. கட்டுமானச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், விரைவாக இடம் ஒதுக்கினால், மக்கள் வரிப்பணம் வீணாகாது. நகரின் ஏதாவது ஒருபகுதியில் விரைவாக இடம் ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.