பெண்ணை மிரட்டி 11 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை: பெருந்துறையில் பட்டப்பகலில் துணிகரம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
பெண்ணை மிரட்டி 11 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை: பெருந்துறையில் பட்டப்பகலில் துணிகரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
14:06

பெருந்துறை: பெருந்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து, பெண்ணை மிரட்டி, 11 பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாயை, மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, கொங்கு நகர், வள்ளலார் வீதியை சேர்ந்த கார்த்திக் மனைவி மல்லிகா, 33; தம்பதிக்கு, 13, 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளி மாணவர்கள். மல்லிகாவின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, சென்னிமலையில் கார்த்திக் வசிக்கிறார். மல்லிகா, மகன்களுடன் உள்ளார். மல்லிகா ஊர் ஊராக சென்று சேலை, நைட்டி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை மகன்களை, பள்ளியில் விட்டு விட்டுட மல்லிகா வீடு திரும்பினார். கதவை தாழிடாமல் கொஞ்சம் திறந்து வைத்திருந்தார். அப்போது குல்லா, முக கவசம் அணிந்த ஆண் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். கத்தியை காட்டி மிரட்டி, ஐந்தரை பவுன் தாலிக்கொடி, நான்கரை பவுன் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி என, 11 பவுன் நகைகளை பறித்துக் கொண்டான். பீரோவை திறக்கச் சொல்லி, அதில் வைத்திருந்த, மூன்று லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, மல்லிகாவை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டான். சம்பவ இடத்தை ஏ.டி.எஸ்.பி., சண்முகம், பெருந்துறை ஏ.எஸ்.பி., கவுதம் கோயல் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சோதனையும் நடந்தது. பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையனை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X