கோவை:கோவை விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற பயணியை சி.ஐ.எஸ்.எப்., படையினர் மடக்கிப்பிடித்தனர்.கோவையில் இருந்து மும்பை செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணியின் உடைமைகளை சி.ஐ.எஸ்.எப்., படையினர் சோதனை செய்தபோது, இரண்டரை கிலோ எடை கொண்ட மண் போன்று காணப்பட்ட கரிமருந்துடன் வந்த பயணியை, பீளமேடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.விசாரணையில், அந்த நபர், டில்லியை சேர்ந்த வருண் அரோரா,33, என்றும், தன்னிடம் இருப்பது தங்க மண், கம்போடியாவில் இருந்து கொண்டு வந்ததாகவும், அதில் எத்தனை சதவீதம் தங்கம் இருக்கிறது என்பதை அறிவதற்காக கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 29 ல் டில்லியில் இருந்து கொச்சிக்கு சென்றதாகவும், அங்கு விவரம் கிடைக்காத நிலையில் காரில் திருச்சி சென்றுள்ளார். அங்கும் தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை. தங்க நகைப்பட்டறைகள் மிகுந்த கோவையிலும் தகவல் அறிய முடியவில்லை.எனவே, மும்பை செல்ல திட்டமிட்டார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்த போது தான் அவரது பையில் இருந்த தங்க மண், சி.ஐ.எஸ்.எப்., போலீசாரின் ஸ்கேனரில் சிக்கியது.அவரிடம் இருந்த தங்கமண்ணில், குறைந்த வெடிப்புத்திறன் கொண்ட கரிமருந்து இருப்பதால், போலீசார் அவரை கைது செய்தனர்.