கோவை:மண் வளத்தில் நுண்ணுாட்டங்கள் பற்றாக்குறை அதிகளவில் இருப்பது வேளாண் பல்கலை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.கோவை வேளாண் பல்கலை இயற்கை வள மேலாண்மை இயக்கம், இயக்குனர் சாந்தி கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மண்வளம், அங்ககக் கரிமம் மற்றும் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து குறைவாக உள்ளது. மணிச்சத்து, சாம்பல் சத்து, மத்திம நிலையில் இருந்து அதிகளவில் உள்ளன. இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான, சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன.சமீபத்தில் பல்கலையின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை சார்பில், விவசாயத்தை பிரதானமாக கொண்ட, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலுார், விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய, 11 மாவட்டங்களில், இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் அனைத்து சத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இதில், அங்ககக் கரிமம் மற்றும் தழைச்சத்து குறைவாக இருப்பது தெரிந்தது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களில், மக்னீசியம், கந்தக சத்துக்கள் பற்றாகுறை அதிகளவில் உள்ளது. அடுத்து சுண்ணாம்பு சத்தும் பற்றாக்குறையாக உள்ளது.நுண்ணுாட்ட சத்தில், முக்கியமான துத்தநாகம் பற்றாக்குறை மிகவும் அதிகளவில் உள்ளது. அதாவது, 42 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது.போரான் சத்து, 20, தாமிரம், 16.7, மாங்கனீசு, 5, இரும்பு சத்து, 10 சதவீதம் பற்றாக்குறை என உள்ளது. சுண்ணாம்பு தன்மை அதிகளவில் உள்ள மண்ணில் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இதற்கு மண்வள மேலாண்மை முக்கியமானது. மண் பரிசோதனை செய்து அதற்கேற்றார் போல் தேவையான சமச்சீர் உரங்களை இட்டு மகசூலை பெருக்கலாம். வேளாண் பல்கலையில் இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.