சென்னை:சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் ஒரு மாதமாக வரலாறு காணாத கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின், நவ., 7 முதல், பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல், போரூர் ஏரி கலங்கல் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டார்.அதன்பின், மவுலிவாக்கம், மாங்காடு சுரங்கப்பாதை பகுதியில், போரூர் ஏரி உபரி நீர் வாய்க்காலில், கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ள நீர் வரத்தை பார்த்து ஆய்வு செய்தார்.அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் சாலை பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
பொதுமக்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.இறுதியாக, தனலட்சுமி நகர் பகுதியில், மழை வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார் .அப்பகுதியில், சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை, போர்க்கால அடிப்படையில் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, அமைச்சர் அன்பரசன், எம்.பி., - டி.ஆர்.பாலு, கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.