மதுரை, -மாடித்தோட்டம், ஊட்டச்சத்து தோட்டத்திற்கான பொருட்கள் தோட்டக்கலை துறை சார்பில் அந்தந்த வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் விற்கப்பட உள்ளது. இதற்கான துவக்கவிழா நாளை(டிச.,6) நடக்கிறது.செடிகள் வளர்ப்பதற்கான ஆறு பைகள், செடி வளர்ப்பதற்கான 2 கிலோ தென்னை நார்க்கழிவு, 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி உயிர் உரங்கள் தலா 200 கிராம், அசாடிராக்டின் 100 மில்லி, விதை வளர்ப்பிற்கான இலவச கையேடு அனைத்தும் சேர்ந்து ரூ.900 மதிப்புடையது. அரசின் மானியம் ரூ.675. பயனாளிகள் ரூ.225 கொடுத்து இவற்றை வாங்கலாம். 12 வகையான காய்கறி விதை பாக்கெட்கள் அடங்கிய பை ரூ.45. மானியம் போக ரூ.15க்கு விற்கப்படுகிறது. ஊட்டச்சத்து தோட்டத்தை உருவாக்கும் வகையில் பப்பாளி கன்று, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, புதினா, கற்பூரவல்லி, திப்பிலி, ஆலோவேரா செடி கன்றுகள் அடங்கிய பை ரூ.75 மானியம் போக ரூ.25க்கு விற்கப்படுகிறது.மதுரையில் கிழக்கு, மேற்கு தோட்டக்கலை வட்டார உதவி இயக்குனர் அலுவலகம் கிழக்கு யூனியன் ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. மற்ற வட்டாரங்கள் அந்தந்த கிராமப்பகுதிகளில் உள்ளதால் பயனாளிகள் அங்கு சென்று வாங்கலாம்.