தாம்பரம் : தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கத்தில், வசந்த் அண்ட் கோவின் 100வது கிளை திறப்பு விழா, நேற்று வெகு சிறப்பாக நடந்தது.வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் திகழும் வசந்த் அண்ட் கோ நிறுவனம், தமிழகம் முழுதும் இயங்கி வருகிறது.
இதன், 100வது கிளை திறப்பு விழா, தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கத்தில், நேற்று காலை நடந்தது.புதிய கிளையை, வி.ஜி.பி., நிறுவனரான வி.ஜி.சந்தோஷம், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து, வசந்த் அண்ட் கோ பங்குதாரர் தமிழ்செல்வி வசந்தகுமார், நிர்வாக இயக்குனர்களான கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த், தங்க மலர், வினோத் குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். இந்நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள், டீலர்கள் என, நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, நேற்று வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் எம்.பி., கூறியதாவது:எங்களின் 100வது கிளை சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1978ம் ஆண்டு, சிறிய கடையாக, தி.நகரில் துவங்கப்பட்ட வசந்த் அண்ட் கோ, இன்று 100வது கிளையை தொடங்கியுள்ளது.100 கிளைகளை தொடங்க வேண்டும் என்பது எங்கள் தந்தை வசந்தகுமாரின் கனவு. தற்போது, அந்த கனவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நிதி ஆண்டிற்குள், மேலும் 50 கிளைகளை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதன்படி, 2022ம் ஆண்டிற்குள் 150 கிளைகளாக, வசந்த் அண்ட் கோ உயரும்.மேலும், 100வது கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, 100 டிவி, 100 மிக்சி, 100 மின் விசிறி என, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு விஜய் வசந்த் கூறினார்.