மாதவரம் : பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வந்த ஆந்திர மாநில சிறுமியை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தார்
.புழல், சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சிவா. இவர், நேற்று முன்தினம் மாலை, சவாரிக்காக மாதவரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் சென்றார்.அப்போது, சாலையோரம் கவலை நிறைந்த முகத்துடன் சென்ற 13 வயது சிறுமியை அழைத்து விசாரித்தார்.அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, பேருந்து மூலம் மாதவரம் வந்ததும் தெரிய வந்தது.
எங்கு போவதென தெரியாமல் சுற்றித்திரிந்த சிறுமியை, சிவா மீட்டு மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜிடம் ஒப்படைத்தார்.போலீசார், சிறுமியிடம் பெற்றோரின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.நேற்று காலை, மாதவரம் காவல் நிலையம் வந்த சிறுமியின் பெற்றோர், அவரை அழைத்துச் சென்றனர்.போலீசார், சிறுமி மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கியதுடன், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்க காரணமான ஆட்டோ ஓட்டுனரை வெகுவாக பாராட்டினர்.