கோயம்பேடு : வரத்து குறைந்ததையடுத்து, தக்காளி விலை மீண்டும் சதம் அடித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து உள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து குறைந்தது. இதையடுத்து, கடந்த மாதம் இரண்டாம் வாரத்தில், ௧ கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டது. நவ., 20ம் தேதி, ௧ கிலோ தக்காளி, 35 முதல்- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
மஹாராஷ்டிரா விவசாயிகளிடம் இருந்து, கிலோ 25 ரூபாய்க்கு வாங்கப்படும் தக்காளி, சென்னைக்கு எடுத்து வர போக்குவரத்திற்கு, 15 -- 20 ரூபாய் செலவானது.தொடர் மழை மற்றும் சாலைகள் பழுது காரணமாக, சந்தைக்கு காய்கறி மற்றும் தக்காளி வரத்து மீண்டும் குறைந்து, கடந்த மாத கடைசியில், 1 கிலோ தக்காளி, 50 -- 70 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு, 40 லாரிகளில், 600 டன் தக்காளி மட்டுமே நேற்று வந்தது. சென்னைக்கு, 1,100 டன் தக்காளி தேவை உள்ளது.இதில், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து, 10 லாரிகள் வந்தன. வரத்து குறைவு காரணமாக, ௧ கிலோ தக்காளி, 90 -- 100 ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல், காய்கறி வரத்து குறைவால், மற்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. கிலோ பீன்ஸ், 80 -- 90 ரூபாய்க்கும், நுாக்கல், 80, முருங்கைக்காய், 150 -- 180, கேரட், 50 -- 75 ரூபாய்க்கும் விற்பனையானது.
விலை உயர்வு காரணமாக, தக்காளி இல்லாமல் உணவு சமைக்கும் 'பார்முலா'வை இல்லத்தரசிகள் கையாள ஆரம்பித்திருக்கின்றனர்.
மைதானம் திறந்தும் பலனில்லை!
கோயம்பேடு சந்தையில், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி, தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.தக்காளி மைதானம் திறந்து, லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்கவும் ஏற்றவும் அனுமதி அளித்தால், ஒரு கிலோ தக்களி, 40 ரூபாய் வரை வெகுவாக குறையும் என, வியாபாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.நீதிமன்ற உத்தரவுபடி, நவ., 3ம் தேதி, கோயம்பேடு சந்தையில், தக்காளி லாரிகள் நிறுத்த, 1 ஏக்கர் நிலத்தை, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். இருந்தும் விலை குறையாமல் மீண்டும் 100 ரூபாய் எட்டியுள்ளது.