மாமல்லபுரம் : மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்கள் காண, சுற்றுலா பயணியருக்கான பார்வை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால தொல்லியல் சின்னங்களை, சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர்.
தொல்லியல் துறை அவர்களிடம் நுழைவுக்கட்டணம் வசூலித்து அனுமதிக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு கருதி, கடந்த ஆண்டு ஒன்பது மாதங்கள், இந்த ஆண்டு இரு மாதங்கள் என, தொல்லியல் சின்னங்கள் மூடப்பட்டன.ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, ஐந்து மாதங்களாக இவை திறக்கப்பட்டு, காலை 10:00 மணி - மாலை 5:00 மணி வரை, பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.பயணியர் அதிகரித்த நிலையில், காலை 10:00 மணிக்கு முன் வருவோர், சிற்பங்களை அருகிலிருந்து காண இயலாமல், வெளியில் இருந்து காண்கின்றனர்.எனவே, பார்வை நேரம் காலை 6:00 மணி - மாலை 6:00 மணி நீட்டித்து, பயணியரை அனுமதிப்பதாக அத்துறையினர் தெரிவித்தனர்.