விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பட்டப்பகலில் நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள கடையிலிருந்து, மர்ம நபர் மொபைல் போன் திருடும் வீடியோ பரவி வருகிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் லுாகாஸ் தெருவைச்சேர்ந்தவர் ரபீக். கடலுார் சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி எதிரே கயிறு, கீற்று, தார்பாய் விற்பனை செய்கிறார்.
நேற்று முன்தினம் காலை 8:45 மணியளவில், இவரது கடைக்கு பல்சர் பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமி, பொருட்கள் விலை விபரம் கேட்டுக் கொண்டிருந்தார்.கடையில் வேலை செய்த ஊழியர், கடையை சுத்தம் செய்தார். அப்போது, மேஜையில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போனை திருடிச் செல்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள், கடையில் இருந்த சி.சி.டிவி.,யில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான வீடியா பதிவுகள், சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.ரபீக் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.