சேலம்: சேலம் மாவட்டத்தில், 49 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. களரம்பட்டியில் மின்மாற்றி, மின்கம்பங்கள் சாய்ந்தன. இடைப்பாடியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து, மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் இடைப்பாடியில், 95 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மேட்டூர், 69, சங்ககிரி, 58.2, சேலம், 44.7, காடையாம்பட்டி, 11, ஓமலூர், 10, ஏற்காடு, 3 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலத்தில், 467.3 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவு, 312.9 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 49 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. சேலம், களரம்பட்டி, பாரதியார் தெருவில், மழையால் கால்வாயில் சென்ற அதிகமான தண்ணீரால் கற்கள் சரிந்து, 200 கே.வி., மின்மாற்றி சாய்ந்து விழுந்தது. 3 மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால், 4 வீடுகளில் லேசான சேதம் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட, மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். நேற்று காலை முதல், மின்வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இடைப்பாடி, கொங்கணாபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. நேற்று காலை வரை தொடர்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இடைப்பாடி நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, சாலைகளில் ஓடியது. உழவர் சந்தை, ராஜாஜி காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. வெண்டனூர் ஏரி நிரம்பியதால் நாச்சூர், கேட்டுக்கடை, சேலம் பிரதான சாலையில் உள்ள, 150க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏரி நீர் புகுந்தது. இதனால், மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. 52 ஆண்டுக்கு பின், நாச்சூர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள், பொக்லைன் மூலம், மேடான இடங்களை உடைத்து, தண்ணீரை வெளியேற்றினர். அதேபோல், இடைப்பாடி தாசில்தார் அலுவலகம், அதை சுற்றி உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. பூலாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளில், குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.உருவான நீரூற்று: மகுடஞ்சாவடி, கன்னந்தேரி ஊராட்சி, ஒண்டிக்கடை, கரட்டுக்காட்டை சேர்ந்த விவசாயி முத்துசாமி, 45. அவரது தோட்டத்தில், நேற்று முன்தினம் இடி தாக்கியதால், விவசாய நிலத்தின் அடியிலிருந்து நீரூற்று ஏற்பட்டது. தொடர்ந்து ஊற்று நீர் தேங்கி, தோட்டம் குளமாக மாறியது. இதை, கிராம மக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.மக்கள் அவதி: ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், பழைய, புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதி வழியாக, அகல ரயில் பாதையை கடக்க, சுரங்கப்பாதை உள்ளது. அங்கு ஊற்று நீர் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டாலும், மீண்டும் தண்ணீர் ஊற்றெடுக்கிறது. இதனால், ஊற்று ஏற்படும் இடத்தை அடைத்து, மீண்டும் தண்ணீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.பாலத்தை தூர்வார வேண்டும்: பனமரத்துப்பட்டியில் நேற்று காலை, 3:00 முதல், 6:00 மணி வரை கனமழை கொட்டியது. இதனால், மழைநீர் கோம்பைக்காடு ஓடை வழியாக, நத்தமேடு ஏரிக்கு பெருக்கெடுத்து வந்தது. ஏரியில் மண் அள்ள வெட்டப்பட்ட குழிகள் நிரம்பின. அங்குள்ள ஏரி ரோடு பகுதியில் அடிக்கரை சாலைக்கு அடியில் உள்ள பாலம் மண் மூடி கிடக்கிறது. இதனால், தாராபுலி கரட்டில் பெய்யும் மழைநீர் ஏரிக்கு செல்ல வழியில்லை. கரடு அடிவார வயலில் தேங்கி மகசூல் பாதிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதனால், மண்மூடி கிடக்கும் பாலத்தை தூர்வார வேண்டும்.மேட்டூர் எம்.எல்.ஏ., ஆய்வு: மேட்டூர் அணை திப்பம்பட்டி உபரி நீருந்து நிலையத்தில் எம்.எல்.ஏ., சதாசிவம் ஆய்வு செய்த பின் கூறியதாவது: கடந்த மாதம், 16 முதல், நேற்று வரை, இரு மோட்டார்களை இயக்கி, 0.032 டி.எம்.சி., உபரிநீர் ஏரிகளில் நிரப்பப்பட்டுள்ளது. வரும் வாரத்தில், பொட்டனேரி, குன்றிவளவு, சாவடியூர் ஏரிகளில், மேட்டூர் அணை உபரிநீரை நிரப்ப ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.கச்சராயன்குட்டை நிரம்பியது: கொங்கணாபுரம், கச்சராயன்குட்டை, 4 ஆண்டுக்கு பின் நேற்று நிரம்பியது. வழிந்த தண்ணீர், கொங்கணாபுரம் - சங்ககிரி சாலை வழியாக சென்றதால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால், தாரமங்கலம், ஓமலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரிகள் போன்றவை, சங்ககிரியில் இருந்து இடைப்பாடி வழியாக கொங்கணாபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன. மாலை, தண்ணீர் வெளியேறுவது குறைந்ததால், வழக்கம்போல் போக்குவரத்து இயங்கின.