சேலம்: சேலம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மண் பரிசோதனை நிலையத்தில், 20 ரூபாய் செலுத்தி, விவசாயிகள், தங்கள் விளை நிலத்தின் மண்ணை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம், மண் வளத்துக்கு ஏற்ப பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், நுண்ணூட்ட சத்துகள் வழங்க வேண்டும். அதனால், உரச்செலவை குறைத்து, மண்வளம் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். அத்துடன், பாசனத்துக்கு செலுத்தும் நீரின் தன்மையையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். வேளாண்துறை உற்பத்தி செய்யும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் போன்ற உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களை, வேதி உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அதன்மூலம், 20 - 25 சதவீதம், தழை, மணிச்சத்து குறைவதோடு இடுபொருட்களின் செலவும் குறைந்து, வயல்வெளி சாகுபடி செலவும் குறையும். மகசூல் அதிகரிக்கும்.