ஆத்தூர்: விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் சரண் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டன்பட்டி, மேற்குகாட்டு வளவை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 74. இவர் நிலப்பிரச்னையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஆத்தூர் ஊரக போலீசார், நரசிங்கபுரம், செல்லியம் பாளையத்தை சேர்ந்த, தி.மு.க., நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், 28, அறிவழகன், 28, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை, இரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, நேற்று, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், போலீசார் அனுமதி பெற்று விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, கூலிப்படையை சேர்ந்த, நரசிங்கபுரம் தினேஷ், 30, ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முஸ்தபா, 33, ஆத்தூர் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால், வழக்கின் முக்கிய குற்றவாளியான, கல்பகனூரை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், 60, அவரது நண்பர் சக்திவேல், 45, பிடிபட்டால் மட்டுமே, சுப்ரமணியின் உடலை கண்டறிந்து, கொலைக்கான காரணம் உள்ளிட்ட தகவல் கிடைக்கும் என, போலீசார் கூறினர்.